2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் சினோரா பி.எஸ். அசோக் குமார் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

திரையுலகிலிருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அவர் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் சினோரா பி.எஸ். அசோக் குமார் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 

வாக்கு சேகரிப்பின் போது, அவருடன் இருந்த ஒரு பெண் பேசத் தொடங்கியபோது, வேட்பாளர் அசோக் குமார் அந்தப் பெண்ணின் வாயைப் பொத்தி “போதும் போதும்” எனக் கூறி கீழே இறக்கிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த வீடியோவைப் பகிர்ந்த திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன், வேட்பாளரின் செயலைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அந்தப் பெண் பேசத் தொடங்கும் முன்பே, ‘இது என் அண்ணன் மகள்’ என்று வேட்பாளர் அசோக் குமார் முறைப்படி அறிமுகம் செய்துள்ளார். குடும்ப உறுப்பினர் என்ற உரிமையிலேயே அவர் அவ்வாறு விளையாட்டாகச் செய்துள்ளார். ஆனால், அந்தப் பகுதியை மட்டும் சிலர் திட்டமிட்டு எடிட் செய்து தவறான நோக்கத்தில் பரப்பி வருகின்றனர். முழு வீடியோவையும் பார்க்காமல் ஒரு தரப்பினை மட்டும் விமர்சிப்பது முறையல்ல என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், உண்மையான வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக வேட்பாளர் குறித்த இந்த மோதல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.