சென்னை கொளத்தூரில் 25.72 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள அண்ணா திருமண மாளிகையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியாகும். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, பத்து நாட்களுக்கு ஒரு முறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால்தான் எனக்கு முழு திருப்தி ஏற்படுகிறது. கொளத்தூர் என்ற பெயரை சொன்னாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்றுதான் சொல்வார்கள். கொளத்தூர் மக்கள் அளிக்கும் வரவேற்பில் தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் உள்ளார் என்று சொல்வதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கிறது. அதேபோன்றுதான் என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என் மனைவி இருக்கிறார்.

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். ஓராண்டு காலம் நான் மிசாவில் சிறையில் இருந்தபோது என் மனைவி கோபித்துக் கொண்டு ஏதாவது அப்செட் ஆகி முடிவு எடுத்திருந்தால் என்னுடைய நிலை என்னவாகி இருக்கும். கொஞ்சம் நினைச்சு பாருங்க. எவ்வளவோ கொடுமைகள் எனக்கு வந்த போதும் என்னை அவர் ஊக்கப்படுத்தியதால் நான் தற்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்றார். மேலும் கொளத்தூர் தொகுதி மக்களை பார்த்த நான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை செல்லப்பிள்ளை நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.