மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டுள்ளார் . மேலும் சர்க்கரை, அரிசி, பாமாயில் போன்றவைகளில் தரம் குறித்தும் அவற்றின் இருப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இதனையடுத்து பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்கள் அனைத்தும் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்துள்ளார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 80 சதவீத விழுக்காடு பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 9-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்கின்றார். அதனை தொடர்ந்து அன்றைய தினமே மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல்  தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த பொங்கல் பரிசு தொகுப்பினை தரமானதாக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

மேலும் மாநிலம் முழுவதும் 238 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் விதமாக மதுரை கப்பலூரில் புதிதாக சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.  கட்டுமான பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில் விரைவில் முதல்வரால் திறக்கப்படுகிறது. இதனையடுத்து பா.ஜ.க அரசியல் செய்வதற்காக போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் தேங்காய் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை  முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு  எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 11 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பதற்கான புதிய கிடங்குகள் உருவாக்கப்பட்டு இருப்பதால் மழைக்காலத்தில் விவசாயிகளின் நெற்பயிகள் நனையாது என அவர் தெரிவித்துள்ளார்.