பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக வியாழக்கிழமை முதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்து கழக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் கோயம்பேடு, தாம்பரம், கே.கே நகர் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி, மாதாவரம் ஆகிய 5 பேருந்துகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக கூடுதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த இணை பேருந்துகள் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான மூன்று நாட்களுக்கு இயக்கப்படுகிறது. இதனையடுத்து பொங்கல் பண்டிகை முடித்து சென்னை தினமும் பொதுமக்களின் வசதிக்காக ஜனவரி 17, 18 -ஆம் தேதி மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 பேருந்துகளும், அதேபோல் ஜனவரி 18,19-ஆம் தேதி அதிகாலை 125 பேருந்துகளும் மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.