நவீன உணவகங்களில் பெயர்களைக் கவர்ச்சியாக மாற்றி உணவுகளை அதிக விலைக்கு விற்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், பெங்களூருவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது பெங்களூருவைச் சேர்ந்த அருண் ராஜ் என்ற இளைஞர் அங்குள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தார். உணவுகளைத் தேர்வு செய்யும் போது (Menu card), ‘Chilly-dusted Goldfingers’ என்ற பெயரில் ஒரு உணவு வகை இருப்பதைப் பார்த்தார். பெயர் மிகவும் வித்தியாசமாகவும், ஏதோ புதிய வகை உணவாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் அதனை ஆர்டர் செய்தார்.

சிறிது நேரத்தில் அவர் மேசைக்கு வந்த அந்த உணவைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். அது வேறொன்றுமில்லை, நாம் சாதாரணமாக கடைகளில் வாங்கிச் சாப்பிடும் குழல் வடிவிலான அப்பளம்  தான். அதன் மேல் லேசாக மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்தது.

இதற்காக அந்த உணவகத்தில் 150 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அருண் ராஜ், “அந்த உணவு வந்த பிறகுதான் எனக்கு விஷயம் புரிந்தது. என் பரம்பரையிலேயே உப்பு, மிளகாய்த்தூள் தூவிய சாதாரண அப்பளத்தை 150 ரூபாய்க்கு வாங்கிய முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்,” என வேடிக்கையாகவும் ஆதங்கத்துடனும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இணையத்தில் பரவி வரும் இந்தப் புகைப்படம், உணவகங்களில் உணவு வகைகளுக்கு வைக்கப்படும் விசித்திரமான பெயர்கள் மற்றும் அவற்றின் விலை குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.