கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது ஒற்றை யானை ஒன்று பேருந்தை வழிமறித்துள்ளது. யானையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பென்னட் என்பவர் பேருந்தை சில அடி தூரத்திலேயே நிறுத்தியுள்ளார்.

யானையை பார்த்ததும் பேருந்தில் இருந்த பயணிகளும் அச்சமடைந்தனர். அப்போது பயணிகளில் இருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்கி யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது யானை அவரை நோக்கி ஓடி வந்துள்ளது. இதைப் பார்த்து பயந்த பயணிகள் சத்தம் போட்டதில் யானை வனப்பகுதிக்கு சென்று விட்டது. யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.