தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் மற்றும் மூத்த ரயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வாலிடம் ஈஸ்ட் கோஸ்ட் சங்கம் தென்னை விவசாயிகள் சங்கம், அரிமா சங்கம், வக்கீல் சங்கம், எம்எல்ஏ நகர வர்த்தகக் கழகம், பேராவூரணி ரயில் பயணிகள் சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடியில் இருந்து பேராவூரணி வழியாக இரு முனைகளில் இருந்தும் சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும். அதேபோல் காரைக்குடி, திருவாரூர் வழித்தடத்தில் இரவு நேர கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும். முன்பதிவு மையத்தை தொடங்க வேண்டும். பேராவூரணி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.