
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரே நாடு ஒரே திட்டத்திற்கு தற்போது கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் போது மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று கூறியது. இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில் அந்த குழு தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ததால் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் நடைபெறும்.
அதன் பிறகு 100 நாட்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது. பாஜகவின் வரட்டு கௌரவத்திற்காக மட்டும்தான் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது. மேலும் இது போன்ற பிரிவினை தந்திரங்களை கைவிட்டு விட்டு அதற்கு பதிலாக வேலை வாய்ப்பின்மை மற்றும் பிரிவினைவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.