ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் பகுதியில் பகிர்மோகன் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவிக்கு துறையின் தலைவர் சமீர் சாஹூ பாலி என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இவர் மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் படிப்பை கெடுத்து வாழ்க்கை சீரழித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக மாணவி புகார் கொடுத்த உரிய நடவடிக்கை எடுக்காததாக கூறப்படும் நிலையில் கல்லூரி முதல்வரின் அலுவலகத்தின் முன்பாக மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அந்த மாணவியை காப்பாற்ற முயன்ற சக மாணவன் ஒருவரும் 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த மாணவி 90 சதவீத தீத்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து பேசிய ஒடிசா மாநில முதல்வர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார். மாணவி தீக்குளித்த பிறகு கல்லூரி முதல்வர் திலீப் கோஷே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மாணவி உயிரிழந்ததால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட துறை தலைவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது மாணவி உயிரிழந்ததால் ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. கடந்த 12 ஆம் தேதி அந்த மாணவி தீக்குளித்த நிலையில் மூன்று நாட்களாக உயிருக்கு போராடி இன்று உயிரிழந்து விட்டார். அந்த மாணவிக்கு வயது 22. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகாரை திரும்ப பெற வேண்டும் என கல்லூரியின் முதல்வரும் பாலியல் தொல்லை கொடுத்த துறை தலைவரும் தன்னை மிரட்டியதாக கூறியது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.