நாமக்கல் மாவட்டம் வீசானத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னை சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் சாய் கிரிஷ் என்ற மகன் இருந்துள்ளார்.

சாய் கிரிசை நாமக்கல் இ பி காலனியில் இருக்கும் பாட்டி சாந்தி பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அருண்குமாரும் காயத்ரியும் காரில் புறப்பட்டு நாமக்கல்லுக்கு வந்தனர். அப்போது படுக்கை அறையில் சாந்தி மயங்கி கிடந்தார்.

அவருக்கு அடியில் குழந்தையும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் சாந்தியும் குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சாந்தி அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரை சாப்பிடவில்லை என்றால் சாந்தி மயங்கி விழுந்து விடுவாராம்.

நேற்று முன்தினம் சாந்தி எதிர்பாராதவிதமாக குழந்தை மீது மயங்கி விழுந்ததால் மூச்சு திணறி குழந்தை இறந்ததாகவும், சாந்தி உடல் நலக்குறைவால் இறந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.