சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமையை அவரது தந்தையும் பெரியப்பா மகனும் சேர்ந்து 9 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சிறுமியின் தாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 6 ஆண்டுகளாக குடும்பத் தகராறு காரணமாக நான் தனியாகத்தான் வசிக்கிறேன்.

எனக்கு ஒரு மகள் உள்ளார். இரண்டு ஆண்டுகள் எனது மகள் எனது கணவருடன் மாமியார் வீட்டில் வசித்தார். இரண்டு ஆண்டுகளில் என் மகள் பூப்பெய்த நாள் முதல் 9 மாதங்களாக சிறுமியின் தந்தையும், அண்ணன் முறையான பெரியப்பா மகனும் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த கொடுமைக்காரர்களை கைது செய்யவே இல்லை. என் மகள் வயிற்று வலியால் துடித்து கொண்டிருக்கிறாள்.

காவல் நிலையத்திற்கு சென்று நீங்கள் புகார் எடுக்கிறீர்களா இல்லை இந்த ஸ்டேஷன் வாசலில் நான் உயிரை விடவா என கேட்டேன். அதற்கு அவர்கள் ஏம்மா அதான் அண்ணன் காரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டானே.. பெத்த அப்பன் தானே.. மன்னித்து விடு… இதை ஏன் பெரிது படுத்துற என சொல்கிறார்கள். குழந்தைக்கு நீதி வேண்டும். நியாயம் வேண்டும் என நான் காவல் நிலையத்திற்கு சென்றேன். என் மகளின் உடல்நலம் மோசமாக இருக்கிறது என அந்த தாய் கண்ணீருடன் கூறியுள்ளார்.