பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் என 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் சூட்கேஸ் மற்றும் சாக்கு மூட்டைகளில் நதியிலும் கால்வாயிலும் வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உயிரிழந்த கிருஷ்ண முராரி என்பவர் கடந்த மே 5ஆம் தேதி தனது தாயை அடித்துள்ளார். இதுகுறித்து தாய் மகாராஷ்டிராவில் இருந்த தனது மற்றொரு மகன் விகாஸ் குப்தாவிடம் அழுது புலம்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விகாஸ், தனது நண்பன் தீபக் என்பவருடன் ஊருக்கு வந்துள்ளார்.
கடந்த மே 7 அன்று வீட்டில் பங்குச் சந்தை குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், விகாஸும் அவனது நண்பனும் சேர்ந்து கிருஷ்ண முராரியைக் கத்தியால் குத்திக் கொன்றனர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அந்த கொடூர கும்பல் இரக்கமின்றி குத்திக் கொலை செய்தது. அதன் பிறகு, கிருஷ்ண முராரியின் வாய் பேச முடியாத தம்பியான ராகுல், கோடாரியால் 4 பேரின் உடல்களையும் 18 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
இந்த பயங்கரக் கொலைகள் நடக்கும்போதும், சடலங்கள் துண்டு துண்டாக வெட்டப்படும்போதும், அவர்களின் பெற்ற தாயும், தம்பிகளின் மனைவிகளும் வீட்டிலேயே இருந்து அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்துள்ளனர். பின்னர், உடலின் பாகங்களை மூட்டைகளில் அடைத்து, ஸ்கூட்டி மூலம் கொண்டு சென்று நதியிலும் கால்வாயிலும் வீசியுள்ளனர்.
கொலையை மறைக்க வீட்டில் இருந்த இரத்தக் கறைகளைக் கழுவி சிமெண்ட் பூசியுள்ளனர். நதியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு குழந்தையின் அங்கன்வாடி சீருடை தையல் அடையாளத்தை (டேக்) வைத்தும், சிசிடிவி மற்றும் மொபைல் சிக்னல்களை வைத்தும் போலீஸார் தம்பி விகாஸ் குப்தாவை கைது செய்தனர்.
விசாரணையில், அண்ணனின் நடத்தையால் ஆத்திரமடைந்து இந்த கொலையைச் செய்ததாக அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஹைதராபாத்தில் வேலை செய்யும் மற்றொரு தம்பியான சுபாஷ் குப்தாவுக்கு இதில் தொடர்பில்லை என்பதால், அவர் தற்பொழுது இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து வருகிறார். இந்த கொடூர வழக்கில் தொடர்புடைய மற்றவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
