
தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் சுமார் 162 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பள்ளிகள் அனைத்தும் தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட சில அனுமதிகளை பெற வேண்டும். இருந்தாலும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு பள்ளிக்கு மட்டும் அனுமதி வாங்கிக்கொண்டு அதன் மூலம் பல பள்ளிகளை திறந்து அதில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் தமிழகத்தில் 162 சுயநிதி பள்ளிகள் முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளின் நிர்வாகம் உங்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெறப்படும் எனவும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது அந்த பள்ளிக்கு அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது