நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் போல இந்த வருடமும் புதிய வகை பட்டாசுகள் சந்தையில் விற்பனைக்கு வந்தன. அதில், மத்திய பிரதேசத்தின் போபாலில் “புதிய ரக தீபாவளி துப்பாக்கி” என்ற பெயரில் ஒரு ரசாயன விளையாட்டு பொருள் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த துப்பாக்கியை வெடிக்க வைக்க கால்சியம் கார்பைட் (Calcium Carbide) என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரசாயனத்தை தண்ணீருடன் கலக்கும்போது அசிட்டிலின் (Acetylene) என்ற வாயு உருவாகி, பெரிய சத்தத்துடன் வெடிக்கும் தன்மை கொண்டது.
இந்த புதிய ரக துப்பாக்கியை பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகள் கண் எரிச்சல் மற்றும் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் போபால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவர்கள் கூறுகையில், “அசிட்டிலின் வாயுவை சுவாசித்தால் தலைவலி, கண் எரிச்சல், மூச்சுத் திணறல், நியாபக மறதி போன்ற ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். இது சாதாரண பட்டாசு அல்ல; ரசாயன வெடிகுண்டு போல செயல்படும்” என கண் மருத்துவர் ஹேமலதா யாதவ் எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியதையடுத்து, மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. அதிகாரிகள் போபால் நகரில் உள்ள பல பட்டாசு விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் அந்த சோதனையின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அதே வகை புதிய ரக தீபாவளி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த ரசாயன விளையாட்டு பொருளை தயாரித்த மற்றும் விநியோகித்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
