கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 25 வயதுடைய கார் டிரைவர் வசித்து வருகிறார். இவரும் 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே கல்லூரி மாணவியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் கார் டிரைவரையும், கல்லூரி மாணவியையும் அழைத்து விசாரித்தனர். அப்போது மாணவி தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனால் போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதனை கண்டித்து மாணவியின் உறவினர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார் டிரைவரும் கல்லூரி மாணவியும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கல்லூரி மாணவியிடம் தொடர்ந்து அவரது பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகும் கல்லூரி மாணவி தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனால் போலீசார் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் பெற்றோரின் பாச போராட்டம் வீணானது.