கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதிக்குட்பட் காவல் எல்லைக்குள், கடந்த மாதம் 11 மாத பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. “குழந்தைக்குப் பால் புகட்டி தூங்க வைத்தோம், ஆனால் அவள் 2 அடி உயரமுள்ள கட்டிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தாள்” என்று அவளது பெற்றோர் காவற்துறையினரிடம் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததால், காவல் துறை தற்காப்புக்காக இதனை சந்தேக மரணமாகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

ஆனால், வந்த பிரேதப் பரிசோதனை  அறிக்கை ஒட்டுமொத்த வழக்கையும் தலைகீழாக மாற்றியது. குழந்தையின் முகம், நெஞ்சு, கால்கள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் கடுமையான காயங்கள் இருந்தன. மேலும் அவளது விலா எலும்புகள் உடைந்திருந்ததுடன், உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தக் கசிவு ஏற்பட்டு, மூச்சுத்திணறல் காரணமாகவே குழந்தை உயிரிழந்தது உறுதியானது.

வெறும் 2 அடி உயரக் கட்டிலில் இருந்து விழுந்தால் இவ்வளவு கொடூரமான உள் காயங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவற்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. சம்பவத்தன்று கணவன் – மனைவி இடையே பயங்கர சண்டை நடந்துள்ளது.

அப்போது இடையில் வந்து அழுதுகொண்டே இருந்த 11 மாதக் குழந்தையை, ஆத்திரமடைந்த தந்தை தூக்கி உயரத்திலிருந்து கீழே வீசியுள்ளார்.

மருத்துவ ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில், அவலஹள்ளி காவற்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

இந்த மாத தொடக்கத்தில் குழந்தையைக் கொன்ற தந்தை அதிரடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இந்த கொடூரக் கொலையில் தாயின் பங்கு என்ன என்பது குறித்து காவற்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.