வாழ்க்கையின் அந்திமக் காலம் என்பது எப்படி இருக்க வேண்டும்? ஓடி ஆடி உழைத்துத் தேய்ந்த உடலுக்குக் கொஞ்சம் ஓய்வும், தன் பிள்ளைகளின் மார்பில் சாய்ந்து கொள்ளும் நிம்மதியும், பேரன் பேத்திகளின் மழலைச் சத்தமும்தான் ஒரு முதியவரின் ஆகப்பெரும் சொர்க்கம்.

ஆனால், கோவாவின் பெதல்பாடிம் பகுதியைச் சேர்ந்த 83 வயதான லோயலா சௌசா என்ற அந்தப் பாவித் தந்தைக்கு, முதுமை என்பது ஒரு வாழும் நரகமாக மாறும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். பெற்ற மகனே காலனாக மாறுவான், தன் ரத்தமே தன்னைச் சித்திரவதை செய்யும் என்று தெரிந்திருந்தால், அவர் அன்றே அந்த உயிரைத் துறந்திருப்பார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு காணொளி காட்டுத்தீயாகப் பரவி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் கூட்டு மனச்சாட்சியையும் உலுக்கியெடுத்தது. கிரிசோஸ்டோமோ மரியானோ சோரஸ் என்ற ஒரு நல்லுள்ளம் கொண்ட மனிதர், அந்த வீடியோவைப் பார்த்துப் பதறிப்போய் காவல்துறைக்கு ஓடியபோதுதான், ஒரு வீட்டுக்குள்ளே நடந்து கொண்டிருந்த அந்த கொடூரமான மனிதவேட்டை வெளிச்சத்திற்கு வந்தது.

செருப்படி… அறை… ஆபாச வசவுகள்: ஒரு தந்தையின் மௌன ஓலம்!

அந்த வீடியோவில் கண்ட காட்சிகள், எத்தகை கல்நெஞ்சக்காரர்களின் கண்களிலும் இரத்தக் கண்ணீரை வரவழைக்கக் கூடியவை. 83 வயதான, தள்ளாடும் அந்தப் பழுத்த மரத்தை—லோயலாவை—அவரது மருமகள் ஐரீன் கோன்சால்வ்ஸ் மற்றும் மகன் இசிடோரியோ சௌசா ஆகிய இருவரும் சேர்ந்து மிருகத்தனமாகத் தாக்கிக் கொண்டிருந்தனர்.

மருமகள் ஐரீன், அந்த முதியவரின் முகம் என்றும் பாராமல் கன்னத்தில் அறைகிறார்; போதாதென்று தன் காலிலிருந்த செருப்பைக் கழற்றி அவரது தலை, முகம், கழுத்து எனப் பச்சாதாபமே இன்றித் தாக்குகிறார். அடுத்த சில நொடிகளில், பெத்த மகன் இசிடோரியோவும் சேர்ந்து கொண்டு, தன் கைகளால் தந்தையை அடித்துத் துவைக்கிறார். அடிக்கின்ற வலியை விட, “நீயெல்லாம் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்?” என்று அவர்கள் வீசிய ஆபாசமான வார்த்தைகளும், கொடூரமான மிரட்டல்களும் அந்த முதியவரின் ஆன்மாவையே கொன்றிருக்கும்.

அவர் அந்த வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி, ஒரு கைதியைப் போல அடைத்து வைக்கப்பட்டு, தினந்தோறும் இந்தத் தம்பதியரால் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு வந்த அதிர்ச்சி உண்மைகள் தற்போது அம்பலமாகியுள்ளன.

இந்த விவகாரம் சமூக நலத்துறை இயக்குநர் தீபக் தேசாய் மூலம் டிஜிபி வரை செல்ல, கோல்வா போலீசார் வெள்ளிக்கிழமை மாலை அதிரடி நடவடிக்கை எடுத்தனர். பாரதிய நியாய சம்ஹிதா (BNS) மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்தப் பாசமில்லா மகன் இசிடோரியோ கைது செய்யப்பட்டார்.

மருமகள் ஐரீன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி அவர் கைது செய்யப்படவில்லை.

 மனித உறவுகள் இவ்வளவு கீழ்த்தரமாக நசிந்து போவதைக் கண்டு போகிறது. பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் தந்தையரை, முதுமையில் ஒரு பாரமாக நினைத்து, செருப்பால் அடிக்கும் அளவிற்கு இந்த மனித இனம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? உடுத்திய துணிக்கும், உண்ட சோற்றுக்கும் கணக்குப் பார்க்கும் இந்த வாரிசுகள், தங்களின் சிறுவயதில் அந்தத் தந்தை சிந்திய வியர்வைத் துளிகளுக்கும், தூக்கமில்லா இரவுகளுக்கும் என்ன விலை கொடுக்கப் போகிறார்கள்?

காலம் ஒரு நாள் பதில் சொல்லும்!

லோயலா சௌசா என்ற அந்த முதியவரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் காலப்போக்கில் ஆறிவிடலாம். ஆனால், தன் சொந்த மகனே தன்னை அடித்த அந்த வடு, அவரது இதயத்தில் மரணம் வரை ஆறவே ஆறாது.

சட்டத்தின் தண்டனை இசிடோரியோவிற்கும் ஐரீனுக்கும் கிடைத்துவிடும். ஆனால், இந்தச் சமூகம் இருக்கும் வரை, பெற்றோர்களைக் கைவிடும் அத்தனை வாரிசுகளுக்கும் இந்தச் சம்பவம் ஒரு பெரும் சாபக்கேடு.

இன்று நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கொடுக்கும் அதே செருப்படி, நாளை உங்கள் பிள்ளைகள் மூலம் உங்களுக்கும் திரும்பக் கிடைக்கும் என்பதை இந்த நவீன கொடூரர்கள் மறந்துவிடக் கூடாது. ஏனெனில், காலம் ஒருபோதும் தர்மத்தைத் தண்டிப்பதில் தவறு செய்வதில்லை!

“>