பாஜக கட்சியின் மாநில தலைவர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவண்ணாமலை ஆலயத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியதோடு, அது தொடர்பான வழக்கில் தலைமறைவாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன் என்ற நபர், தற்போது முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கிறார்.

அதனை முதலமைச்சரும் சிரித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிறார். பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரை, காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் வரவேற்புபசாரம் அளிப்பது, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் என்ன வகையான செய்தியை வெளிப்படுத்துகிறது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா? தமிழகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், குற்றவாளிகள் சிறிதும் பயமின்றி உலாவுவதும், திமுகவின் நிழலில் இருப்பதால்தான் என்பதற்கு இன்னும் என்ன உதாரணம் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.