நெல்லூர் மாவட்டம் கவாலியில் ஏற்பட்ட கொடூரமான குற்றம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காளத்தைச் சேர்ந்த நயன் பிஸ்வாஸ் எனும் கம்பவுண்டர், கடந்த 15 ஆண்டுகளாக கவாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

குறிப்பாக, அந்த மருத்துவமனையின் உரிமையாளரின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்த இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, தனது முதலாளியின் மனைவியைக் கொலை செய்து பின்னர் அவரது உடலை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் கணவர் அளித்த புகாரின் பேரில் கவாலி போலீசார் நயன் பிஸ்வாஸை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிஸ்வாஸ் தனது ஜாமீன் மனுவை ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிபதி டி.மல்லிகார்ஜுன ராவ் தலைமையிலான அமர்வு இன்று மறுத்தது.

” நீதிபதி கடும் கண்டனம்:

இந்த வழக்கின் விசாரணையில், நீதிபதி ராவ் கூறியதாவது: “இத்தகைய கொடூரமான குற்றத்திற்கு ஜாமீன் வழங்குவது, சமுதாயத்தில் தவறான செய்தியை ஏற்படுத்தும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பெயரில் குற்றத்தின் தீவிரத்தை குறைத்து பார்க்க முடியாது. ஒரே கூரையின் கீழ் வாழ்ந்த குடும்பத்தின் மீது இந்த நபர் மேற்கொண்ட நம்பிக்கைத்துரோகம் மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தும்.”

மேலும், “இது போல திட்டமிட்ட, காமவெறியில் ஏற்பட்ட கொடூரமான செயல்கள், சமூக ஒழுக்கத்தையும், நீதியின் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும். இத்தகைய வழக்குகளில் நியாயமான பதிலடியாக சட்டத்தைக் கடுமையாக செயல்படுத்தவேண்டும்” எனக் கூறினார். அதன் அடிப்படையில், குற்றத்தின் தீவிரம், சமூக தாக்கம் மற்றும் பொதுமக்கள் நீதிமுறையின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் நோக்கில், நயன் பிஸ்வாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு, சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் நீதியின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எதிர்காலத்தில் இத்தகைய கொடூரங்களுக்கு எச்சரிக்கை எனவும் கருதப்படுகிறது.