“பெண் ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாறாக குழந்தை பெற்றுக்கொள்ள எந்தவொரு நீதிமன்றமும் கட்டாயப்படுத்த முடியாது” என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
15 வயது சிறுமி ஒருவரின் 7 மாத கால கர்ப்பத்தை மருத்துவ ரீதியாகக் கலைக்க அனுமதி அளித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிறக்கவிருக்கும் குழந்தையின் உரிமையை விட கர்ப்பிணிப் பெண்ணின் விருப்பமே மேலானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. ஒரு சிறுமியிடம் அவர் விருப்பத்திற்கு மாறாகக் கர்ப்பத்தைத் திணிப்பது, அவரது கல்வி, மனநலம் மற்றும் சமூக அந்தஸ்தைப் பாதிப்பதுடன், அரசியலமைப்புச் சட்டம் 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமி ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயன்றதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், விரும்பத்தகாத கர்ப்பத்தைச் சுமக்கக் கட்டாயப்படுத்துவது அந்தப் பெண்ணுக்குப் பயங்கரமான மன உளைச்சலையும் உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று விளக்கியது.
“குழந்தையைப் பெற்றெடுத்து தத்து கொடுத்துவிடுங்கள் என்று சொல்வது எளிது; ஆனால் அது ஒரு கருத்தாக இருக்க முடியாது” என்று கூறிய நீதிபதிகள், ஒரு பெண்ணின் இனப்பெருக்கச் சுதந்திரத்தில் நீதிமன்றங்கள் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.
மேலும், இத்தகைய சூழலில் நீதிமன்றங்கள் அனுமதி மறுத்தால், அது அந்தப் பெண்ணைச் சட்டவிரோத கருக்கலைப்பு மையங்களை நாடச் செய்து, அவரது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்றும் எச்சரித்த உச்ச நீதிமன்றம், உடனடியாகச் சிறுமிக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.
