குஜராத்தின் ஆமதாபாத் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் சாலைகளின் தடுப்புச்சுவர்களில், பெண்களுக்கு எச்சரிக்கை வழங்கும் வகையில் ஒட்டப்பட்ட சில போஸ்டர்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
இந்த போஸ்டர்களில், “நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்லாதீர்கள். அப்போது கற்பழிக்கப்படலாம். இருட்டான இடங்களுக்கு நண்பர்களுடன் செல்ல வேண்டாம். கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகலாம்” என்கிற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
இது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்புடைய அமைப்பே, அவர்களை குற்றவாளியாக்கும் போக்கை காட்டுகிறது என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், பெரும் எதிர்ப்புக்கு உள்ளான அந்த போஸ்டர்கள் உடனடியாக கிழிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள், “மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை இப்படித்தான் என்பதற்கே இது எடுத்துக்காட்டு” என மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் அளித்த போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் நீதா தேசாய், “அந்த போஸ்டர்கள் போலீசாரின் அல்ல. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்தான் அந்த போஸ்டர்களை அன்பளிப்பாக வழங்கியது. போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் மட்டுமே காட்டப்பட்டன.
ஆனால் சர்ச்சைக்குரிய வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் எங்களுக்கு தெரியாமலேயே ஒட்டப்பட்டிருக்கின்றன” என தெரிவித்தார். இதன் மூலம், காவல்துறையின் மேலாண்மை மற்றும் சுயக்கட்டுப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
