கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். விருத்தாசலத்திற்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம், அம்மேரி மற்றும் தொப்பலிகுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்ற அவர், தனது ‘முரசு’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். கேப்டன் விஜயகாந்தின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான இந்தத் தொகுதியில், பிரேமலதாவுக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது கிராமப் பெண்கள் வைத்த கோரிக்கையை கனிவுடன் கேட்ட அவர், வெற்றி பெற்றதும் பெண்களுக்குப் பயனுள்ள வகையில் கோயில் கட்டித் தருவதாகத் திடீர் உறுதி அளித்தார். மக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டு அவர் அளித்த இந்த எமோஷனல் வாக்குறுதி, கிராமப்புற வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் பாணியிலேயே மக்களிடம் இறங்கி வேலை செய்யும் பிரேமலதாவின் இந்த அதிரடி அணுகுமுறையால் விருத்தாசலம் தொகுதி தேர்தல் களம் தற்பொழுது களைகட்டியுள்ளது.
