திண்டுக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள், கள்ளச்சந்தையில் போலி மதுபானம் விற்போர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளில் செயல்பட்ட அனுமதி இல்லாத மதுபான பார்களுக்கு காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சீல் வைக்க சென்றனர்.

அதன்படி 3 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் அதில் 2 கடைகளில் பூட்டே போடாமல் வெறும் துணியை மட்டும் சுற்றி கண்துடைப்பு நாடகம் நடத்தி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குடித்து இறந்தவர்களின் சம்பவத்தால் தமிழகமே பரபரப்பாக காணப்படும் சூழலில், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்ட விரோத மதுபானபார்களுக்கு நடவடிக்கை எனும் பெயரில் நாடகம் நடத்திச் சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது