டெல்லியில் நடந்த கொடூரமான இரட்டை கொலை சம்பவம் தலைநகரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அங்கு வசித்து வந்த குசும் சின்ஹா (63) மற்றும் அவரது மகள் பிரியா சேகல் (34) ஆகியோர் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணையில், இந்த இரட்டை கொலைக்கு பிரியாவின் கணவர் யோகேஷ் சேகல் காரணம் எனவும், அவர் கத்தரிக்கோல் கொண்டு தன் மனைவியையும் மாமியாரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது: ஆகஸ்ட் 28ஆம் தேதி மகன் சிராகின் பிறந்தநாள் விழாவில் கணவன்–மனைவி இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரியாவின் தாய் குசும் சின்ஹா, மகளுடன்தங்கியிருந்தார். ஆனால் சனிக்கிழமை மதியம் வரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், பிரியாவின் சகோதரர் மேக் சின்ஹா வீட்டுக்குச் சென்றார்.
அங்கு வீடு வெளியில் பூட்டப்பட்டதோடு, கதவு அருகே இரத்தக் கறைகள் இருப்பதை கண்ட பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, தாய்–மகள் இருவரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
பிரியாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளி யோகேஷை கைது செய்தனர். சம்பவ இடத்தில் இரத்தம் தடவிய ஆடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தரிக்கோலை பறிமுதல் செய்துள்ளனர். அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறுதான் இந்த கொலைக்குக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் ரோஹினி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
