இந்தியா மே மாதத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர் குறித்து புதிய காட்சிகள் மற்றும் விவரங்களை இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவின் தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் நான்கு நாட்களிலேயே மண்டியிட்டது. இந்த தாக்குதலில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது: “ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களிலேயே தாக்குதலை வெற்றிகரமாக முடித்தோம். அப்போது பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது.
1971 போருக்குப் பிறகு தாக்குதலுக்குள்ளாகாத பாகிஸ்தானின் முக்கிய இலக்குகளும் இந்த நடவடிக்கையில் எங்கள் தாக்குதலால் சேதமடைந்தன. இது எங்கள் திட்டமிடுபவர்கள் மற்றும் செயல்படுத்தியவர்களின் திறனை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆயுதத்தின் பயன்பாட்டையும் கணக்கிட்டு துல்லியமாக இலக்குகளைத் தாக்கியதால் இணைச் சேதம் எதுவும் ஏற்படவில்லை” என்றார்.
“போரை தொடங்குவது எளிது, ஆனால் முடிப்பது கடினம் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையில் எங்களுக்கு வழங்கப்பட்ட முழு சுதந்திரமே வெற்றிக்குக் காரணம். மிகக் கடினமான சூழ்நிலையிலும் எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் செயல்பட்ட எங்கள் படையினருக்கு பெருமை சேர்கிறது.
இந்தத் தாக்குதலின் நோக்கம் பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்புவதே. அதை நாம் துல்லியமாக செய்தோம்” என ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி வலியுறுத்தினார்.
