மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்தின் பிலாலி தாலுகாவில் உள்ள படூர் கிராமத்தில், வாள் பாபா என்று அழைக்கப்படும் ஞானேஸ்வர் கார்டே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன் உடலில் தெய்வ சக்தி இறங்குவதாகக் கூறி வந்த இவர், கையில் கூர்மையான வாள் மற்றும் எலுமிச்சை பழங்களை ஏந்தி பொதுமக்களைப் பயமுறுத்தி வந்துள்ளார்.
மேலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைக் குணப்படுத்துவதாகவும், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதாகவும் கூறி அப்பாவி மக்களிடமிருந்து பெரும் தொகையைச் சுருட்டியதுடன், பெண்களையும் குழந்தைகளையும் மனரீதியாகத் துன்புறுத்தி வந்தது விசாரணையில் அம்பலமானது.
இதனால் பாபாவின் மோசடி குறித்த புகார்களைத் தொடர்ந்து, காவல்துறையினர் அதிரடியாகச் சோதனையிட்டு அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த இருவரையும் கைது செய்தனர். இந்தச் சோதனையின் போது பிடிபட்ட பாபாவின் ஆதரவாளர்கள் காவல்துறையினரைத் தடுத்துப் பணி செய்ய விடாமல் இடையூறு விளைவித்தனர்.
தற்போது மகாராஷ்டிராவின் மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் இது போன்ற போலிச் சாதுக்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், மூடநம்பிக்கைகளில் சிக்கிப் பணத்தையும் உயிரையும் இழக்க வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
