மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் போது கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்படி 72 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்சி பொறுப்புகளில் நீடிக்க முடியாது. இந்நிலையில் கே. பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆகிறது.

இதன் காரணமாகத்தான் அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழக சிபிஎம் கட்சிக்கு புதிய மாநில செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி மத்திய குழு உறுப்பினர் சண்முகம் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த கட்சியின் இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநில செயலாளராக இருந்தவர். இவர் கடந்த வருடம் தமிழக அரசின் அம்பேத்கர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகம் பதவி ஏற்ற நிலையில் அவர் தற்போதே திமுகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது திமுக வெளிச்சத்தில் எப்போதும் சிபிஎம் இருந்ததில்லை எனவும், அப்படி கூறுவது பொருத்தமற்றது என்றும் கூறியுள்ளார். அதன்பிறகு மக்கள் பிரச்சினைக்காகவும், மதவெறி சக்திகளை ஒழிக்கவும் தெருவில் இறங்கி போராடுவோம். எப்போதுமே நாங்கள் எங்கள் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கே. பாலகிருஷ்ணன் பதவிக்காக ஊடகங்கள் திமுகவை விமர்சித்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளதாகவும் இது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.