உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது தலைமைப் பொறுப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. நீண்டகாலமாக சிஇஓ-வாகப் பணியாற்றி வந்த டிம் குக் அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ள நிலையில், நிறுவனத்தின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜான் டெர்னஸ், இதுவரை வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்தார். செப்டம்பர் 1, 2026 முதல் இவர் முறைப்படி பொறுப்பேற்க உள்ள நிலையில், டிம் குக் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜான் டெர்னஸின் தலைமையிலான இந்த புதிய தொடக்கம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஐபோன், ஐபேட் மற்றும் மேக் போன்ற முக்கிய சாதனங்களின் வளர்ச்சியில் கடந்த இரு தசாப்தங்களாக டெர்னஸ் பெரும் பங்காற்றியுள்ளார்.
இது குறிப்பாக, ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தயாராகி வரும் வேளையில், ஒரு பொறியியல் நிபுணரான இவர் சிஇஓ-வாகப் பொறுப்பேற்பது நிறுவனத்தின் எதிர்காலத் தயாரிப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் டிம் குக் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து, ஜான் டெர்னஸ் ஆப்பிள் நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்லப் போகிறார் என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
