ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர் துரைபாண்டியுடன் ராமநாதபுரத்திற்கு குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார். நேற்று சுரேஷும் அவரது நண்பரும் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் ஒரு பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பாதி சாப்பிட்டு கொண்டிருந்த போதே பிரியாணியின் நடுவில் பெரிய வண்டு இறந்த நிலையில் கிடந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கேட்டபோது கடை ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்தனர்.

இதுகுறித்து சுரேஷ் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தர்மர் அங்கு சென்று வண்டு கிடந்த பிரியாணியை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் கடையில் இருந்த எண்ணெய், அரிசி, உணவுப் பொருட்களை சோதனை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வண்டு கிடந்ததாக கூறப்பட்ட பிரியாணியை முழுவதுமாக கொட்டி அழிக்குமாறு அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். மேலும் கடையை சுத்தமாக பராமரித்து உணவு பொருட்களை கவனமாக சமைத்து பரிமாற வேண்டும் என அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.