கர்நாடக மாநிலம் பெங்களூருவில், மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரைப் பரிமாறியது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், கணவர் தாக்கியதால் மனமுடைந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி காவ்யா (27). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காவ்யா வீட்டில் சாம்பார் வைத்துள்ளார். மீதமிருந்த அந்தச் சாம்பாரை பிரிட்ஜில் (Fridge) வைத்து, கடந்த மூன்று நாட்களாகத் தனது கணவர் மற்றும் குழந்தைக்குத் தொடர்ந்து காவ்யா உணவாகப் பரிமாறி வந்ததாகக் கூறப்படுகிறது.
மூன்றாவது நாளாகவும் பழைய சாம்பாரையே உணவில் பரிமாறியதால் ரங்கசாமி கடும் கோபமடைந்துள்ளார். “ஏன் மூன்று நாட்களாக ஒரே சாம்பாரையே கொடுக்கிறாய்?” என்று காவ்யாவிடம் ரங்கசாமி கேள்வி கேட்டுத் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ரங்கசாமி காவ்யாவைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கணவர் தன்னைத் தாக்கியதாலும், திட்டியதாலும் பெரிய அளவில் சண்டையிட்டதாலும் மன உளைச்சலுக்கு ஆளான காவ்யா, விரக்தியில் விஷம் குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரண சாம்பார் விவகாரத்தில் ஒரு உயிர் பறிபோயிருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
