பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் தமிழக இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியனுக்கும், பிரபல திரைப்பட இசையமைப்பாளர் சுந்தர மூர்த்திக்கும் திங்கள்கிழமை (நேற்று) திருமணம் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணச் சடங்குகள் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றன. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடி, தற்போது தங்களது இல்லற வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ரோஷினி கரம்பிடித்துள்ள சுந்தர மூர்த்தி, தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் யோகி பாபு நடித்த ‘பொம்மை நாயகி’, நயன்தாராவின் ‘ஐரா’, ‘தண்டட்டி’ மற்றும் ‘டென் ஹவர்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் ரோஷினிக்குக் கிடைத்த வரவேற்பு அபாரமானது. அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய அவர், அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார். ஏற்கனவே சூரி நடித்த ‘கருடன்’, மற்றும் ‘தலைவன் தலைவி’, ‘மெட்ராஸ் மேட்னி’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது திருமணமான நிலையிலும், அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் மணமக்களுக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
