பிரதமர் மோடி அவர்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். நியூயார்க் சென்ற அவர், அமெரிக்காவின் பல்துறை நிபுணர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து ஐ.நா தலைமையகத்தில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பிரதமர் மோடி விமானம் வாயிலாக வாஷிங்டன் சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து காரில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குச் சென்றார்.

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் போன்றோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து இன்று(ஜூன் 22) இரவு பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் விருந்து அளிக்க இருக்கின்றனர். அதற்குரிய ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்காக பிரத்யேக சைவ உணவுகள் தயார் செய்யப்படுகிறது. குறிப்பாக சிறு தானியங்களால் ஆன உணவுகள் தயாரிக்கப்படுவதாக தெரிகிறது. ஆகவே இன்று இரவு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ள விருந்தில், சிறு தானியங்களால் செய்யப்பட்ட சைவ உணவுகள் வழங்கப்பட இருப்பதாக முதல் பெண்மணி ஜில் பைடன் தெரிவித்துள்ளார்.