பிரதமர் மோடி அவர்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். நியூயார்க் சென்ற அவர், அமெரிக்காவின் பல்துறை நிபுணர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து ஐ.நா தலைமையகத்தில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பிரதமர் மோடி விமானம் வாயிலாக வாஷிங்டன் சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து காரில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குச் சென்றார்.

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் போன்றோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து இன்று(ஜூன் 22) இரவு பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் விருந்து அளிக்க இருக்கின்றனர்.

இந்நிலையில் நாட்டின் 75 வருடகால சுதந்திரம் மற்றும் நிலையான சர்வதேச உறவுகளை அடையாளப்படுத்தும் விதமாக அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி 7.5 காரட் வைரத்தை பரிசாக வழங்கினார். இந்த வைரக்கல் சூரியஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்தினால் தயாரிக்கப்பட்டது என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தது.