துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சுல்தான்பெய்லி பகுதியில், பலி கொடுப்பதற்காக வளர்க்கப்பட்ட பிரம்மாண்ட காளை ஒன்று திடீரென தனது எஜமானரிடம் இருந்து கயிற்றை அறுத்துக்கொண்டு தப்பியோடியது.

அப்படி இப்படி என ஓடிய அந்த மிரண்ட காளை, நேராக அங்குள்ள ஒரு சலூன் கடைக்குள் (Barber Shop) கண்ணாடியை உடைத்துக்கொண்டு அதிரடியாகப் புகுந்தது. காளை உள்ளே நுழைந்ததும் முடி வெட்டிக்கொண்டிருந்த கஸ்டமர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அந்த நேரத்தில் கடையில் இருந்த ஒரு சிறுவனை, கடையின் உரிமையாளர் ரெஷித் கோனி (Resit Koni) கட்டிப்பிடித்துப் பத்திரமாகப் பாதுகாத்தார்.

உடைந்த கண்ணாடித் துண்டுகள் குத்தியதில் கடை உரிமையாளருக்குக் கைகளில் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, உள்ளே நுழைந்த காளை உடைந்த கண்ணாடிகளில் வழுக்கி விழுந்ததால், பெரிய அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் அனைவரும் உயிர் தப்பினர். பின்னர் கடையை விட்டு வெளியேறிய காளை, தெருக்களில் ஓடி அங்குள்ள மக்களையும் வாகன ஓட்டிகளையும் அலறவிட்டது.

இறுதியாகப் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த முரட்டுக் காளையைப் பத்திரமாகப் பிடித்துக் கட்டியதை அடுத்து, அங்கு நிலவிய பெரும் பரபரப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்தது.