2026 டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா காயத்தால் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது இந்திய ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது, தனது இரண்டாவது ஓவரை வீச முயன்ற ராணா, முழங்கால் வலியால் பாதியிலேயே வெளியேறினார். நடப்பு சாம்பியனான இந்திய அணி, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி அமெரிக்காவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் களம் காண உள்ள நிலையில், முக்கிய பவுலரின் இந்த திடீர் காயம் அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மேலும் ஹர்ஷித் ராணா ஒருவேளை தொடரிலிருந்து முழுமையாக விலகும் பட்சத்தில், அவருக்கு மாற்றாக அனுபவமிக்க பிரசித் கிருஷ்ணா அல்லது இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதேபோல், விலா எலும்பு காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரின் நிலை குறித்தும் தேர்வுக் குழு பிசிசிஐ மருத்துவக் குழுவின் முடிவிற்காகக் காத்திருக்கிறது. தொடர் தொடங்குவதற்கு முன்பே காயங்கள் இந்திய அணியைச் சோதித்து வருவதால், மாற்று வீரர்களைத் தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.