டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனின் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் அவர் தொடர்ந்து ரன் குவிக்கத் தவறி வருவது அணி நிர்வாகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இது குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராகக் களம் இறங்கிய அவர், 5 போட்டிகளில் வெறும் 45 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இதனால், அவருக்குப் பதிலாக இளம் அதிரடி வீரர் இஷான் கிஷன் தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் களமிறங்கியது சஞ்சுவின் உலகக் கோப்பை கனவுக்குப் பெரும் அடியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் மிடில் ஆர்டரில் திலக் வர்மா போன்ற வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பும் பட்சத்தில், சஞ்சு சாம்சனுக்கான இடம் பிளேயிங் 11-ல் கிடைப்பது மிகவும் கடினம் எனக் கருதப்படுகிறது. பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னி மோர்கல் போன்றவர்களின் ஆதரவு அவருக்கு இருந்தாலும், மற்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே சஞ்சுவுக்கு விளையாடும் வாய்ப்பு அமையும் என்ற சூழல் உருவாகியுள்ளது.