ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தேரானில் உள்ள புகழ்பெற்ற ‘மகாத்மா காந்தி மருத்துவமனை’ (Mahatma Gandhi Hospital) இஸ்ரேல் நடத்திய மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலில் முற்றிலும் சிதைந்து போயுள்ளது.
மகாத்மா காந்தியின் கொள்கைகளை மதிக்கும் விதமாக, இந்தியா மற்றும் ஈரான் இடையிலான கலாச்சார உறவின் அடையாளமாகக் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, தற்போது போரின் கோர முகத்தால் வெறும் இடிபாடுகளாகக் காட்சி அளிக்கிறது.
குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சைக்குப் பெயர் பெற்ற இந்த மருத்துவமனை மீது குண்டுகள் விழுந்ததில், அங்குள்ள உபகரணங்களும் குழந்தைகளுக்கான சக்கர நாற்காலிகளும் சுக்குநூறாக உடைந்து ரத்தக் கறையுடன் கிடக்கின்றன.
இந்தச் சோகமான தாக்குதலை உலக சுகாதார நிறுவனமும் (WHO) உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் தரப்போ, “மருத்துவமனைகளை ராணுவத் தளங்களாகப் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால்தான் தாக்கினோம்” எனத் தனது செயலை நியாயப்படுத்தி வருகிறது.
ஆனால், “கடந்த 40 நாட்களில் ஒரு குழந்தையைக் கூட நாங்கள் காயப்படுத்தவில்லை, ஆனால் இஸ்ரேல் 600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை அழித்துவிட்டது” என ஈரான் தூதரகம் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அமைதியின் சின்னமாக விளங்கிய காந்தி மருத்துவமனை இன்று போர்க்களமாக மாறியிருப்பது உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
