ஓராண்டு கடின உழைப்பிற்குப் பிறகு ஊழியர்கள் கணிசமான சம்பள உயர்வை எதிர்பார்த்திருந்த வேளையில், நிறுவனம் அவர்களுக்குச் சம்பள உயர்வுக்குப் பதிலாக மலிவான பொருட்கள் அடங்கிய பரிசுப் பைகளை வழங்கிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெடிட் சமூக விவாத மன்றத்தில் அதிருப்தியடைந்த ஊழியர் ஒருவர், கிண்டலாகப் பதிவிட்ட இந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்தப் பரிசுப் பையைத் திறந்து பார்த்தபோது, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், ஒரு பேனா, ஒரு மிட்டாய், ஒரு பிஸ்கட் பாக்கெட் போன்ற மிகச் சாதாரணப் பொருட்கள் மட்டுமே இருந்துள்ளன.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை இது கடுமையாக அவமதிப்பது போல உள்ளது என்றும், குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களிலேயே இதைவிடச் சிறந்த ரிட்டர்ன் கிஃப்ட்டுகளைக் கொடுக்கிறார்கள் என்றும் நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் பதிவின் கருத்துப் பகுதியில் மற்றொரு பயனர், தனது தாயின் நிறுவனத்தில் நடந்த இதைவிட அதிர்ச்சியூட்டும் கதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மனிதவளத் துறையில் பணிபுரிந்த அவரது தாயின் நிறுவனத்தில், மூத்த நிர்வாகிகள் 2.5 கோடி ரூபாய் வரை பெரும் போனஸ் தொகையைப் பெற்ற அதே நேரத்தில், சாதாரண ஊழியர்கள் அனைவருக்கும் தலா ஒரே ஒரு சாக்லேட் சிப் குக்கீ மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஒரு குக்கீயைப் பெறுவதற்குக் கடுமையான உழைப்பைச் செலுத்திய ஊழியர்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்துள்ளனர். நிறுவனத்தின் இந்த கஞ்சத்தனமான போக்கையும், தங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அசிங்கத்தையும் அவமானத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தப் பயனர் தனது வேலையை உடனடியாக ராஜினாமா செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.