மத்தியப் பிரதேசம் காண்ட்வாவில், ராக்கியில் இணைக்கப்பட்டிருந்த எல்இடி பல்பை 1 வயது குழந்தை தவறுதலாக விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து அழுதல், பால் உள்ளிட்ட எந்த உணவையும் உட்கொள்ள முடியாமல் உடனடியாக வாந்தி எடுப்பது போன்ற அறிகுறிகளால் பெற்றோர் பதட்டமடைந்து, குழந்தையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, எக்ஸ்ரேவில் குழந்தையின் தொண்டையில் வெளிப்பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக சிகிச்சை அளித்து, தொண்டையில் சிக்கியிருந்த எல்இடி பல்பை வெற்றிகரமாக அகற்றினர். அது ராக்கியுடன் இணைக்கப்பட்டிருந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

குழந்தையின் தந்தை மனிஷ் படேல் கூறுகையில், “குழந்தை ராக்கியை கையில் பிடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார், சில நேரம் வாயிலும் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் பல்பை எப்போது விழுங்கினார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.
மருத்துவர்கள், குழந்தைகள் விளையாடும் பொருட்களில் சிறிய மற்றும் ஆபத்தான பகுதிகள் இருக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும், பெற்றோர் எப்போதும் கண்காணிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
