உத்தரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் விவாகரத்து தர மறுத்த கணவர் மீது நள்ளிரவில் கொடூரமான முறையில் ஆசிட் வீசிய மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ₹1.75 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கோபால் ஜி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி, முசாபர் (35) என்ற நபர் ஆழமான உறக்கத்தில் இருந்தபோது, அவரது மனைவி கஹ்கஷான் (30) கொலை வெறியோடு ஆசிட் வீசியுள்ளார்.
விசாரணையில், கஹ்கஷானுக்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் இருந்து வந்ததும், இதனால் அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரியதும் தெரியவந்துள்ளது. ஆனால், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் குடும்ப நலன் கருதி முசாபர் விவாகரத்து தர மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஹ்கஷான், கணவனைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். நள்ளிரவில் முதல்முறை ஆசிட் வீசியபோது, வலியால் துடித்த முசாபர் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அவரை விடாமல் துரத்திய கஹ்கஷான், கணவர் என்று கூட பாராமல் இரண்டாவது முறையும் ஆசிட்டை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் முசாபரின் முகம் முற்றிலும் சிதைந்து, இரண்டு கண்களின் பார்வையும் பறிபோனது. நீதிமன்றத்தில் இந்த வழக்கின் கொடூரத் தன்மையை அரசு சிறப்பு வழக்கறிஞர் நரேந்திர குமார் யாதவ் வலுவாக வாதாடி நிரூபித்தார். கணவனைத் துடிக்கத் துடிக்கக் கொல்ல முயன்ற மனைவியின் கொடூர எண்ணத்திற்கு, நீதிமன்றம் தற்போது ஆயுள் தண்டனை மூலம் தகுந்த பாடம் புகட்டியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
