புது தில்லியில் நடைபெற்று வரும் ‘இந்தியா ஓபன் 2026’ பேட்மிண்டன் தொடரில், சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூ மற்றும் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் இடையிலான போட்டியின் போது மைதானத்தில் பறவையின் எச்சம் விழுந்ததால் ஆட்டம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. இந்த அசௌகரியமான சம்பவத்தால் அதிருப்தியடைந்த லோ கீன் யூ, மைதானத்தின் சுகாதார சீர்கேடு குறித்து தனது முகச்சுளிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் ஏற்கனவே தில்லியின் மோசமான காற்று மாசு மற்றும் கடும் குளிரால் வீரர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மைதானத்திற்குள் குரங்குகள் நடமாட்டம் மற்றும் பறவைகளின் எச்சம் போன்ற சுகாதாரப் பிரச்சனைகள் சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

“>

இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்துள்ள உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு, மைதானத்தின் தூய்மை மற்றும் விலங்குகளைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இந்த குறைபாடுகளைச் சரிசெய்ய இந்திய பேட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கூறியுள்ளனர்.

இதனால் வரும் காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பான மற்றும் உலகத்தரம் வாய்ந்த சூழலை உறுதி செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தில்லியின் இந்த மோசமான சூழல் காரணமாகச் சில வெளிநாட்டு வீரர்கள் தொடரிலிருந்து விலகியிருப்பது, இந்திய விளையாட்டு அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத் திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.