
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறியதையடுத்து தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவை அழைத்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் இதற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக தலைவர் மோடியை “கோ பேக் மோடி” என கூறியதையடுத்து தற்போது அவர் “வெல்கம் மோடி” என வரவேற்றுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
அதன்பின் அவர் திமுகவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாளில் 100 ரூபாய் நாணயத்தை வெளியிடும் விழாவை மத்திய அரசு நிகழ்ச்சி என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதாகவும், ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை மாநில அரசு தான் வழங்கியுள்ளதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு விழா என்று மாநில அரசு கூறுவது முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல் இருக்கிறது எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். திமுகவும் பாஜகவும் திடீர் பாச உறவு காண்பிப்பதால் என்ன மர்மம் உள்ளது? எனவும் தமிழக மக்களை ஏமாற்ற மு.க.ஸ்டாலின் பாஜகவோடு ரகசிய கூட்டணி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.