மதுரை மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “கர்நாடகத்தில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். மோடியின் ஆட்சி விளம்பரத்துக்காக செய்யப்பட்டது. சாதி, மதம் மொழியை சொல்லி சிறிது காலத்துக்கு பயன் பெற்றனர். ஆர்என் ரவி என்ற தனி மனிதர் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.

எனினும் ஆளுநர் ரவி எதையும் பேசக் கூடாது. திராவிட மாடலை எடப்பாடி, அண்ணாமலை போன்றோர் விமர்சிக்கலாம். ஆளுநர் கருத்து எல்லை மீறிய செயலாகும். தமிழர்கள் முன்னேற மதுக் கடைகளை மூட வேண்டும். மது விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வைக்கும் எந்த கட்சியும் வெற்றிபெற முடியாது. தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது. எங்கள் வாக்கு வங்கி பலமாக இருக்கிறது. மதம் வேண்டும் கூறுகிறோம், ஆனால் மத வெறி கூடாது” என்று தெரிவித்தார்.