எப்போது பார்த்தாலும் நான் பாஜகவுக்கு அடிமை என்கிறார் முதலமைச்சர் ஒருபோதும் நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன் எனவும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதும் காவிரி பிரச்சனைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்..

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விழா ஒன்றில் பேசியதாவது, விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்தபோது வெளிமாநிலங்களில் உணவுப்பொருட்கள் வாங்கப்பட்டன. வெளிமாநிலங்களில் உணவுப்பொருட்களை வாங்கி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என கேள்வியெழுப்பினார்..

மேலும் காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி முதலமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார். பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு தமிழகத்தின் பிரச்சினை குறித்து பேசவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் தமிழக உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை, தமிழக விவசாயிகள் பிரச்சனை, அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் மத்திய அரசாங்கம்.

அதற்கு நம்முடைய தமிழ்நாட்டு விவசாயிகள் போல், தமிழ்நாடு மக்களைப் போல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். எப்போது பார்த்தாலும் திரு ஸ்டாலின் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமை என்று. நாங்கள் எப்பொழுதுமே எந்த கட்சிக்கும் அடிமை இல்லை என்பதை பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். ஸ்டாலின் அவர்களே உங்களை போல் கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக நீங்கள் அடிமையாக இருக்கலாம்.

ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனும் சரி, நிர்வாகிகளும் சரி, எவரும் எந்த கட்சிக்கும் அடிமை இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.  நாங்கள் அடிமையில்லாத காரணத்தினால் தான் எங்கள் கூட்டணி  ஆட்சியில் இருந்தாலும், அதையும் எதிர்த்து மக்களின் பிரச்சினைக்காக நாடாளுமன்றம் 22 நாட்கள் முடக்குகின்ற அளவிற்கு குரல் கொடுத்த கட்சி அண்ணா திமுக என காட்டமாக தெரிவித்தார்..