
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி பேசுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் இப்படி பேசுகிறாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, தந்தை பெரியார் தமிழ்நாட்டிற்கும் தமிழ் சமுதாயத்திற்கும் செய்த சீர்திருத்தங்கள் ஏராளம். சிலர் தங்களுடைய இருப்பையே பெரியாரை ஆதரித்தும் எதிர்த்தும் பேசிதான் காட்டிக் கொள்கிறார்கள். கடந்த காலங்களில் சீமான் எப்படி பெரியாரை புகழ்ந்து பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்றைக்கு அவர் மாற்றி பேசுவதற்கான காரணம் அவருக்கு மட்டும் தான் தெரியும். நாம் பெரியாரின் பெரும்பாலான கொள்கைகளை ஏற்றுக் கொண்டாலும் அவருடைய கடவுள் மறுப்பு மற்றும் பிராமணிய எதிர்ப்பு கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. பாஜக கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ள கட்சியாக இருப்பதோடு பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சி. பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் இப்படி பேசுகிறார் என்றால் அவர் என்னை எடுப்பார் கை பிள்ளையா அல்லது அவருக்கு சுயபுத்தி தான் இல்லையா. பாஜக தொடர்ந்து பெரியாருக்கு எதிராக பேசக்கூடிய இயக்கம் தான். ஆனால் அதற்காக சீமானை பாஜக தான் இயக்குகிறது என்று கூறினால் அதனை ஏற்க முடியாது. மேலும் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை சீமான் பேசுவதால் அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.