பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று காலை 50 பயணிகளை கொண்ட பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் பலூசிஸ்தான் லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் வளைவில் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்தது. இதனால் தீப்பிடித்து எரிந்து பஸ் முழுவதும் ‌ எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த சக பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கினர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிலர் மாயமாகியுள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.