பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. குறிப்பாக கராச்சி போன்ற பெரிய நகரங்களில் சமையல் எரிவாயு விநியோகம் சீராக இல்லாததால், பொதுமக்கள் தங்களது அன்றாட உணவை சமைக்கக் கூட வழியின்றி தவித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில், கராச்சியின் ஓரங்கி டவுன் போன்ற பகுதிகளில் மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் பிளாஸ்டிக் பலூன்களில் எரிவாயுவை (LPG) நிரப்பி வீட்டிற்கு எடுத்துச் செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.

கடைகளில் சுமார் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை கொடுத்து வாங்கப்படும் இந்த ராட்சத பலூன்களில் கியாஸை நிரப்பி, பின்னர் ஒரு சிறிய டியூப் மூலம் அடுப்புடன் இணைத்து சமையல் செய்து வருகின்றனர். வறுமையின் பிடியில் சிக்கியுள்ள தங்களுக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்த முறை ஒரு வெடிகுண்டை வீட்டிற்குள் வைத்திருப்பதற்கு சமம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிளாஸ்டிக் பலூன்கள் அதிக வெப்பத்தையோ அல்லது உராய்வையோ தாங்கும் சக்தி கொண்டவை அல்ல என்பதால், ஒரு சிறிய நெருப்புப் பொறி பட்டால் கூட பலூன் பயங்கரமாக வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர்.

சர்வதேச நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் பாகிஸ்தானியர்கள், பசியைப் போக்க தங்கள் உயிரையே பணயம் வைத்து வரும் இந்த அவல நிலை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.