பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, நாட்டின் முப்படைகளையும் (தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை) ஒரே அதிகாரியின் நேரடிச் சட்டப்பூர்வக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டம் அங்குள்ள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்பு முறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் இறுதியில் தேசிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற ‘பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் சட்டம், 2026 நாட்டின் புதிய பதவியான ‘முப்படை தலைமைத் தளபதி’ பதவியை அதிகாரப்பூர்வமாக உருவாக்கியுள்ளது. தற்பொழுது ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர்  இந்தப் பதவியை ஏற்றுள்ளார். அவர் தனது தற்போதைய ராணுவத் தளபதி பதவியுடன் சேர்த்து இந்த புதிய பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்.

இதற்கு முன்பு 1976-ல் உருவாக்கப்பட்ட ‘கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர்’  என்ற பதவியே இருந்தது. ஆனால், அந்தப் பதவி வெறும் ஒருங்கிணைப்புப் பணிகளை மட்டுமே செய்யும்; கடற்படையையோ அல்லது விமானப்படையையோ நேரடியாகக் கட்டளையிடும் சட்டப்பூர்வ அதிகாரம் அதற்கு எப்போதுமே கிடையாது.

இந்த புதிய முப்படை தலைமைத் தளபதி பதவியானது வெறுமனே ஒருங்கிணைப்புப் பணியை மட்டும் செய்யாமல், முப்படைகளின் மீது முழுமையான செயல்பாட்டுச் சட்டக் கட்டளைகளை  வழங்கும். மேலும், இது நேரடியாகக் கூட்டாட்சி அரசுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய பதவியிடம் இல்லாத பல அதிரடி  அதிகாரங்களையும் பெற்றுள்ளது.

நிலம், வான், கடல், சைபர் மற்றும் ட்ரோன்  தாக்குதல் செயல்பாடுகளுக்கு இடையில் மிகத் துல்லியமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், முப்படைகளும் தனித்தனியாக இயங்கும் பழைய முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் மற்றும் நெருக்கடியான காலக்கட்டங்களில் ஒட்டுமொத்த முப்படைகளையும் ஒற்றை அதிகாரியின் கீழ் விரைவாக இயக்கச் செய்தல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களை மையமாகக் கொண்டே இந்த மறுசீரமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சட்டம் குறித்து உள்நாட்டிலும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ராவல்பிண்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஜெனரல் நயீம் காலித் லோதி போன்றோர், இந்தப் புதிய சட்டம் பிரதமர் அலுவலகத்திலிருந்து தரைமட்டத்திலான படைப்பிரிவுகள் வரை முறையான மற்றும் தெளிவான கட்டளைச் சங்கிலியை உருவாக்கியுள்ளது என்றும், அசிம் முனிர் இப்போது ஒரு உண்மையான தளபதியாக செயல்பட முடியும் என்றும் வரவேற்றுள்ளனர்.

மறுபுறம், அணு ஆயுதக் கட்டளைப் பதவியை முழுக்க முழுக்க ராணுவமே சட்டப்பூர்வமாகத் தன்வசப்படுத்திக் கொண்டுவிட்டதாக ஆய்வாளர் மஜித் நிஜாமி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடற்படை மற்றும் விமானப்படையின் எதிர்காலப் பணியாளர் முடிவுகள் அனைத்தும் இனி ராணுவத்தின் தலைமையின் வழியேதான் செல்லும் என்பதால், ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பும் முழுமையான ராணுவ ஆதிக்கத்திற்கு சென்றுவிட்டதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். வழக்கறிஞர்கள் சிலர், அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் ஒரு கடிதத்தின் மூலமாகவே அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்யும் அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.