பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய கடற்படை அரபிக் கடலில் மிகத் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பல வெற்றிகரமான கப்பல் எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூடுகள் நடத்தியுள்ளன. குஜராத் மாநிலத்தின் கடற்கரை பகுதிகளிலும் சர்வதேச கடல் எல்லை அருகிலும் இந்திய கடலோர காவல்படையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையின் தகவலின்படி, INS சூரத் போன்ற முன்னணி போர்க்கப்பல்கள் MR-SAM வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. மேலும், நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறனுள்ள ஏவுகணைகளைக் கொண்டு துல்லியமான தாக்குதல் பயிற்சிகள் நடந்து வருகின்றன. “எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாக்கும் இந்திய கடற்படை முழுமையான தயார் நிலையில் உள்ளது” என இந்திய கடற்படை X தளத்தில் பதிவு செய்துள்ளது.

இத்துடன், பாகிஸ்தானின் கடற்படையும் சமீபத்தில் தங்களின் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணை சோதனையை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்தியாவின் இந்த பயிற்சிகள் ஒரு கம்பீரமான பதிலடியாக கருதப்படுகிறது. இந்திய கடற்படை, நாட்டின்  பாதுகாப்பு மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதை இது மேலும் நிரூபிக்கிறது.