உத்தரபிரதேசம், அவுரையா மாவட்டத்தின் பிதுனா பகுதியில் நடந்த மனிதநேயமற்ற சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணியான ருக்ஸர் என்ற பெண், அவரது கணவருடன் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதைக் காரணமாக கூறி மருத்துவமனை நிர்வாகம் அவரை நிராகரித்தது. ஆதார் அட்டை சோதனை அறிக்கை இல்லாத காரணத்தால், அவரைப் பரிசோதனைக்குத் தவிர்த்து வெளியே அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்களை தனியார் மருத்துவமனைக்குத் அழைத்துச் சென்ற போதும் அங்கும் உதவி கிடைக்கவில்லை.
இந்நிலையில், ருக்ஸர் தாமும் அவரது குடும்பத்தினரும் தனியார் மருத்துவமனைக்கு வெளியே சாலையில் தங்கி இருந்தபோது, இரவு சுமார் 11 மணியளவில் கடுமையான பிரசவவலியால் சாலையிலேயே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருடன் இருந்தவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குள் சென்று பணியாளர் நர்ஸை அழைத்து வந்தனர். அந்த நர்ஸ் மருத்துவமனைக்கு வெளியே வைத்து அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்தார்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை நிர்வாகம், “மருத்துவ உதவிக்கான அடையாள ஆவணங்கள் இல்லை, ஹீமோகுளோபின் மிகவும் குறைவாக உள்ளது, எனவே வேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்” என கூறியுள்ளனர். ஆனால், மருத்துவமனையை விட்டு வெளியேறியதற்குப் பிறகு, அந்த பெண் சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்ததே வருத்தத்திற்கும் கோபத்திற்கும் காரணமாக உள்ளது. இச்சம்பவம் மாநிலத்திலேயே சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறது.
